244. அருள்மிகு சிவானந்தநாதர் கோயில்
இறைவன் சிவானந்தநாதர்
இறைவி ஆனந்தவல்லியம்மை
தீர்த்தம் சிவானந்த தீர்த்தம்
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருக்கள்ளில், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'திருக்கண்டலம்' என்று அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் பெரியபாளையத்துக்கு 10 கி.மீ. முன் உள்ள கன்னிப்புதூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். சென்னையிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து நேரடிப் பேருந்து வசதியும் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்ரோட்டில் வலதுபக்கம் திரும்பி, குசஸ்தலை ஆற்றுப் பாலத்தைக் கடந்து மொத்தம் சுமார் 16 கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம். ரெட்ஹில்ஸில் இருந்து காரனோடை, கோட்டகுப்பம் வழியாக சென்றால் 19 கி.மீ. தொலைவு.
தலச்சிறப்பு

Thirukallil Gopuram'கள்ளில்' என்ற ஒரு வகை மரங்கள் சூழ்ந்த இடமாக இருந்ததால் இத்தலம் 'திருக்கள்ளில்' என்ற பெயர் பெற்றது. கயிலாயத்தில் இருந்து தென்திசை நோக்கி வந்த அகத்தியர் இத்தலத்திற்கு அருகில் உள்ள திருப்பாலைவனம் தலத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு அவரது கனவில் வந்த சிவபெருமான் இத்தலத்தில் தாம் இருப்பதை அவருக்கு உணர்த்தினார். அதனால் அகத்தியரும் இத்தலம் வந்து சிவபெருமானை தரிசித்து சிவானந்தம் அடைந்தார். அதனால் இத்தலத்து மூலவர் 'சிவானந்தேஸ்வரர்' என்றும், அம்பாள் 'ஆனந்தவல்லியம்மை' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

Thirukallil Amman Thirukallil Moolavarமூலவர் 'சிவானந்தேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன் அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'ஆனந்தவல்லியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

பிரகாரத்தில் சுந்தர விநாயகர், காளத்தீஸ்வரர், ஆஞ்சநேயர், நாகர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி தமது மடியில் அம்பாளை அமர்த்திக் கொண்டு, தமது கரங்களில் ஜெப மாலை, அமுத கலசம், ஏடு ஆகியவை ஏந்தி 'சக்தி தட்சிணாமூர்த்தி'யாகக் காட்சி தருகின்றார். அவருக்கு அருகில் பிருகு முனிவர் வணங்கிய நிலையில் இருக்கின்றார்.

அதேபோல் இக்கோயிலில் உள்ள முருகப் பெருமான் வலது கையில் ஜெப மாலை, இடது கையில் அமுத கலசம் ஆகியவை தாங்கி நின்ற கோலத்தில் 'பிரம்ம முருகன்' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com